Friday, December 4, 2009

குழந்தைப் போராளி (Child Soldier) : -சைனா கெய்டெட்சி (China Keitetsi) - நூல் மதிப்புரை

குழந்தைப் போராளி (Child Soldier) : எனது வாழ்க்கைக்கான போராட்டம்
-சைனா கெய்டெட்சி (China Keitetsi)

டச்சு மொழியிலிருந்து (2004) தமிழாக்கம் (2007) : தேவா.
286 பக்கங்கள்.
வெளியீடு : கருப்புப் பிரதிகள், சென்னை.

உகாண்டா:
தென்னாப்பிரிக்க கண்டத்தில் வடக்கில் எத்தியோப்பியாவும், சூடானும், கிழக்கே கென்யாவும், மேற்கே காங்கோவும், தெற்கே ருவாண்டாவும், டான்சானியாவும் சூழ இருக்கும் சிறிய நாடுதான் உகாண்டா. மக்கள் தொகை மூன்று கோடி (2009 கணக்கெடுப்பு). 1888ல் ஆங்கிலேயரின் வசமான உகாண்டா 1962ல் விடுதலை கொடுக்கப்பட்டது. அன்றிலிருந்து 1990கள் வரை நிலையற்ற அரசியல் தன்மையும் உள்நாட்டுக் குழப்பங்களும் உகாண்டாவில் மிகுந்து காணப்பட்டன. உகாண்டாவில் மக்கள் காங்கிரஸ் கட்சி (Uganda People’s Congress), உகாண்டா ஜனநாயகக் கட்சி(Democratic Party) என்ற இரு பெரும் கட்சிகள் அரசியலில் முக்கியப் பங்காற்றின. சுதந்திரத்திற்குப் பின் மன்னராக இருந்தவரை மில்டன் ஒபாட்டே பதவியிறக்கம் செய்து ஆட்சியைக் கைப்பற்றினார். ஒபாடேவை சோவியத் யூனியன் ஆதரித்தது. உகாண்டாவின் பக்கத்திலிருந்த டான்சானியாவை தனது கைக்குள் வைத்திருந்த சீனாவின் ஆதிக்கத்தை கட்டுக்குள் வைக்க சோவியத் யூனியன் உகாண்டாவைப் பயன்படுத்தியது.

1971ல் இடி அமீன் அதிகாரத்தைக் கைப்பற்றி உகாண்டாவின் அதிபரானார். அவரது கொடுங்கோலாட்சியில் 3 லட்சம் உகாண்டாவினர் கொல்லப்பட்டனர். சிறுபான்மை இந்தியர்களுக்கு எதிராக பயங்கரவாதத்தைத் தூண்டி இந்தியர்களே அங்கு இல்லாதவாறு செய்தார். இவருக்கு லிபியாவின் கடாபியும், சோவியத் யூனியனும் ஆதரவளித்தன. 1979ல் நடந்த உகாண்டா-டான்சானியா போரில் இவர் பதவியிழந்தார். மில்டன் ஒபாடே மீண்டும் ஆட்சிக்கு வந்தார். 1985ல் அவரைப் பதவியிறக்கம் செய்தார் ஜெனரல் டிட்டோ ஒக்கல்லோ. யோவேரி முசவேனியின் தலைமையிலான NRA (National Resistance Army) அரச எதிர்ப்புப் படை புரட்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றியது. முசவேனி புதிய அதிபரானார். அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து முசவேனி ஜனாதிபதியாக உள்ளார். இங்கு பல கட்சி முறை நசுக்கப்பட்டுள்ளது. முசவேனி புதிய தலைமுறை ஆப்பிரிக்கத் தலைவர்களில் ஒருவராக மேற்குலகால் பார்க்கப்படுகிறார். இவரை எதிர்த்த, எதிர்க்கிற படையான அரசரின் எதிர்ப்புப் படை (Lords Resistance Army) குழந்தைப் போராளிகளை ஈடுபடுத்துதல், மக்கள்திரள் படுகொலைகள் என போர்க்குற்றங்களை செய்த இயக்கம் என குற்றம் சாட்டப்படுகிறது.

மேற்குலகு இங்கு கவனம் செலுத்தக் காரணம் இங்கிருக்கும் கனிம வளங்களான தாமிரமும், கோபால்ட்டும் மற்றும் இயற்கைச் செல்வங்கள் ஆகும். மேலும் இயற்கை வாயுவும், பெட்ரோலியமும் ஏராளமான அளவில் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றை உறிஞ்சிக் கொண்டு கட்டுமானத்தை உருவாக்கித் தரும் ‘பணியை’ மேற்கத்திய உலகம் செய்கிறது. இங்குள்ள மக்கள் வறுமையின் கோரப்பிடியில் தான் இன்னும் வாழ்கிறார்கள். உகாண்டாவில் இருக்கும் உள்நாட்டுக் குழப்பங்களும், அரசியல் பிரச்சனைகளும் மேற்கத்திய நாடுகள் உகாண்டாவைக் கைக்குள் வைத்திருக்க உதவுகின்றன. உகாண்டாவில் 80 சதவீதம் பேர் கிறித்துவர்களாவர். அரசு மொழியாக ஆங்கிலமும், சுவாஹிலி என்னும் உள்நாட்டு மொழியும் உள்ளன.


சைனா கெய்டெட்சி:
சைனா கெய்டெட்சி 1976ல் உகாண்டாவில் டூட்சி (Tutsi) இனக்குழுவில் பிறந்தார். தனது ஒன்பதாவது வயதில் அரசை எதிர்த்துப் போராடிய யோவேரி முசவேனி(Yoweri Museveni) ன் தலைமையிலான NRA (National Resistance Army) அரச எதிர்ப்புப் படையில் குழந்தைப் போராளியாக சேர்க்கப்பட்டார். அப்போது முதல் 1995 வரை அப்படையில் பணியாற்றிய அவர் பின்னர் உகாண்டாவிலிருந்து தென்னாப்பிரிக்காவிற்குத் தப்பியோடினார். அங்கும் உகாண்டாவின் உளவுப் படையினரால் வேட்டையாடப்பட்ட அவர் 1999ல் டென்மார்க் நாட்டில் அகதியாகத் தஞ்சம் புகுந்தார். தற்போது உகாண்டாவில் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் குழந்தைப் போராளிகளுக்கான மறுவாழ்வு இல்லம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இப்புத்தகம் இவரது இளம் குழந்தைப் போராளி வாழ்க்கையை அவரே சொல்லும் சுயசரிதை வடிவத்தில் உள்ளது. மிகுந்த மனநெருக்கடிக்குள்ளாகி இளம் வயதிலேயே ஒரு 60 வருட போராட்ட வாழ்வின் மிக உக்கிரமான தருணங்களை கண்ட ஒரு வீரப் பெண்ணாக இவர் இருக்கிறார்.
இவரது வலைத்தளம் : http://www.chinakeitetsi.info

குழந்தைப் போராளி – நூல் மதிப்புரை
சைனா கெய்டெட்சி 2001ல் தனது 24வது வயதில் இப்புத்தகத்தை எழுதியுள்ளார். இதில் மூன்று பாகங்கள் உள்ளன. சைனாவின் 9 வயது வரையிலான பிஞ்சு வயதுப் பருவம் முதல் பாகத்திலும், குழந்தைப் போராளியாக 19 வயது வரை NRA படையில் இருந்த அவரது அனுபவங்கள் இரண்டாம் பாகத்திலும், அரசியல் கைதியாக தென்னாப்பிரிக்காவிற்கு தப்பித்து ஓடி டென்மார்க்கில் அகதியாக புகுந்த கணம் வரையிலான பகுதி மூன்றாம் பாகத்திலும் விவரிக்கப் பட்டுள்ளது.

இந்தப் புத்தகத்தைப் படித்ததும் எனது மனதில் மிக அழுந்தியது முதல் பாகமாகும். இம் முதல் பாகத்தில் தனது கலாச்சார வேர்களை தொலைத்துவிட்டு, மேற்கத்திய காலாச்சார வாழ்க்கைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும், வறுமைக்குட்பட்ட ஒரு சமூகத்தில், குடும்பம் கூட வன்முறை தலைவிரித்தாடும், வன்மங்கள் மிகுந்த போர்க்களமாக மாறிவிடும் தன்மை தென்பட்டது. கனவில் கூட நாம் எண்ணியிராத பாட்டியும், தந்தையும், சித்தியும் கொடும் சூனியக்காரர்களாய் சைனாவின் பிஞ்சு மனதை கொதிக்கும் எண்ணெய்யில் போட்டு எடுக்கிறார்கள். 7 வயதில் பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு கிழவனால் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறாள். ஒரு நாள் இரவில் தந்தை இவள் செய்யாத ஒரு தவறுக்காக கண்மண் தெரியாமல் தாக்குகிறான். இவளது சுண்டு விரல் முறிந்து போகிறது. அதை அடுத்த நாள் காலையில் பார்க்கும் போது தான் தந்தைக்குத் தெரிகிறது. சைனாவின் ஆடுகளுக்கு இதுபோல எத்தனையோ குழந்தைகள் நண்பர்களாயிருக்கக் கூடும். ஒன்பதாவது வயதில் தனது உண்மையான தாயைச் சென்று அடையும் சைனா தாயின் மிதமிஞ்சிய அன்பை முதன் முறையாகக் கண்டபோது பயந்து வெளியேறி ஓடிப் போய் மாட்டிக்கொள்ளும் இடம் தான் NRA போராளிக் கூட்டம்.

இங்கு குழந்தைப் போராளியாக மாற்றப்பட்ட சைனா, குழந்தைகள் போர்ச் சூழ்நிலையில் அடையும் மனப் பிறழ்வை உணர்கின்ற அளவிற்கு முதிர்ச்சியுள்ளவராக இருக்கிறார். இவருடைய சைனா என்கின்ற பெயர், தளபதி ஒருவர் ‘சைனாக்காரி மாதிரி இருக்கிறாள்’ என்று பட்டப் பெயராக அழைத்ததால் ஒட்டிக்கொண்ட செல்லப் பெயரே. புரட்சி செய்யும் ராணுவமான NRA மிக ஆழ்ந்த கோட்பாடுகள் எதுவும் இல்லாத வெறும் ஆட்சிக் கவிழ்க்கும் ராணுவமாக மட்டுமே வளர்ந்திருக்கிறது. அது அதன் நிறுவனர் முசவேனியை பெரும் வீரராக புகழ் பாடி போலியாக மக்களை கவர்ந்திழுத்துள்ளது. வீரர்களும், அதிகாரிகளும் போர் என்றால் மிருகத்தனமான வெறியுடனும், குடி, கூத்து என்று ஒழுங்கற்ற, லட்சியமற்ற வெறும் நாடு பிடிக்கிற ஆட்களாகவே இருக்கின்றனர். அதன் அதிகார அமைப்புகள் ஒரு சர்வாதிகார ராணுவ அரசின் அதிகார அமைப்பையே ஒத்திருக்கிறது. பெண்கள் பாலியல் பொருட்களாகவும், குழந்தை பெறும் ஆட்களாகவும் உபயோகப்படுத்தப் படுகிறார்கள். சைனாவும் பாலியல் வன்முறைகளுக்கும், அதிகாரத்தின் கொடூரங்களுக்கும் ஆட்படுகிறார். அவற்றிலிருந்து உறுதியுடன் போரிட்டு விடுபடுகிறார்.

இந்நிலையில் இலங்கையில் விடுதலைப் புலிகள் குழந்தைப் போராளிகளை பயன்படுத்தினர் என்ற குற்றச்சாட்டையும் அதன் தாக்கத்தையும் இத்துடன் வைத்து எண்ணிப் பார்க்க வேண்டும். விடுதலைப் புலிகளையும், NRA இயக்கத்தையும் அவற்றின் நோக்கங்கள், அவை வளர்ந்த விதங்கள், கலாச்சாரப் பின்புலங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது இவ்வியக்கங்களுக்கிடையேயான கூர்மையான வேறுபாடுகள் தெரிய வரும். விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ் தேசியக் கட்டுமானத்தில் வளர்க்கப்பட்டிருந்தாலும், அதன் கலாச்சாரப் பின்புலம் அக்கட்டமைப்பை உறுதியாகவும், தூய்மையானதாகவும் உருவாக்கிக் கொள்ள உதவியிருக்கிறது எனலாம். NRA வைப் போல ‘குழந்தைகள் பலமில்லாத அப்பாவிகள்’ என்ற போர்க்கருத்தை நயவஞ்சகமாகக் கையாளும் தன்மை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரதான கொள்கையாகவோ, நோக்கமாகவோ வைக்கப்படவில்லை. புலிகள் இயக்கத்தில் குழந்தைகள் பாடம் பயிற்றுவிக்கப் பட்டதோடு, ராணுவக் கல்வியும் அளிக்கப்பட்டனர். தகுந்த வயதையடைந்ததும் அவர்கள் விரும்பினால் மட்டுமே ராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். நடைமுறையில் குழந்தைப் போராளிகளாக வளர்க்கப்பட்ட யாரும் ராணுவத்தில் இணையாமலிருந்திருக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. விடுதலைப் புலிகள் குழந்தைகளை கடத்தியதில்லை. போரில் அனாதவராய் விடப்பட்ட குழந்தைகளை அரவணைத்து புகலிடம் தந்து கல்வி பயிற்றுவித்தனர். விடுதலை இயக்கம் மிசனரிகள் போல் நடந்துகொள்ளும் என்று நாம் எதிர்பார்த்தல் தவறானது இல்லையா.

சைனா கெய்டெட்சியின் இப் புத்தகம் எவ்வளவு அப்பட்டமாக அரச எதிர்ப்புப் படையின் உண்மையை வெளியிட்டிருந்தாலும் அரச அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களை பலவீனமானவாக, கேவலமானவையாகச் சித்தரிக்கும் ஒரு ஆளும் வர்க்க வேலையையும் சேர்த்து செய்வதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். தமிழில் இன்னும் சற்று காலங்களில் இது போல தலைப்பில் ஒரு விடுதலைப் போராளி புத்தகம் வெளியிடும் வாய்ப்பு பிரகாசமாகத் தெரிகிறது எனக்கு. அப்புத்தகம் இந்தியா, இலங்கை மற்றும் சீன அரசுகளுக்கு சாதகமாக விடுதலைப் புலிகளை குழந்தைகள் கையில் துப்பாக்கியைக் கொடுத்த கொடூர இயக்கமாகச் சித்தரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. எல்லோரும் வசதியாக மறந்துவிடும் ஒரு உண்மை இது தான். ‘குடும்பங்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கை முறைக்கு பாதுகாப்பில்லாத ஒரு சூழலை அரச பயங்கரவாதங்கள் உருவாக்கியதும், குழந்தைகள் போராளிகளாக உருமாறின சமூகச் சூழலுக்கு ஒரு அடிப்படைக் காரணம்’ என்பதே அது.

சைனா கெய்டெட்சியின் புத்தகத்தின் மூன்றாவது பாகத்தில் குவேனி அதிபராக பதவியேற்ற பின்னர் அரசு பயங்கரவாதம் தலைதூக்கி அதில் சைனா அகப்படாமல் நைரோபிக்குத் தப்பிச் சென்று, அங்கிருந்து தென்னாப்பிரிக்காவில் ஜோகன்ஸ்பர்க்கில் நான்கு வருடம் அமெரிக்காவிற்குச் செல்லும் கனவோடு உயிர் வாழ்கிறார். இறுதியில் UNHC (United Nations High Commission) அவரைக் காப்பாற்றும் ஆபாத்பாந்தவனாக வருகிறது. அவர் டென்மார்க்கில் அகதியாகக் குடியேறுகிறார். இப்புத்தகத்தின் இறுதியில் உகாண்டாவின் அதிபர் முசவேனிக்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதியுள்ளார்.

இப்புத்தகம் வாசிக்கப் படவேண்டிய ஒரு புத்தகம். இது முற்றுப் பெறாத ஒரு கைப்பிரதி போல ஆங்காங்கே தென்பட்டாலும், சைனா கெய்டெட்சி இன்னும் பல புத்தகங்கள் எழுதி அதில் ஆழமான குழந்தைப் போராளிகள் பிரச்சனையைப் பற்றி விடுபட்டவற்றை மேலும் விரிவாகப் பேசுவார் என நம்பலாம். இப்புத்தகம் மூன்றாம் பாகத்தைப் பொறுத்தவரை UNHC ஐ ஒரு கைவிடப்பட்டோரின் ஆதரவாளராகக் காட்டி நிற்கிறது. சைனா கெய்டெட்சியின் வாழ்வில் அது உண்மையிலேயே பெரிய உயிர்காப்பு நிகழ்வு, எனினும் UNHC இப்புத்தகத்தின் வாயிலாக அணிந்துகொள்ளும் முகமூடியாக அது மாறிவிடுகிறது. சைனா கெய்டெட்சி இதை ஒரு காலத்தில் உணர்வார் என நம்புகிறேன். அந்த வீர மங்கைக்கு எனது வணக்கங்கள்.

2 comments:

soorya said...

சும்மா வலைப்பூக்களை மேய்ந்தபோது
தட்டுப்பட்டீர்கள்.
எதையுமே வாசிப்பது என் கெட்டபழக்கம்.
உங்கள் மொழியாடல் என்னைக் கவர்ந்திருக்கிறது.
நன்றி.

pukalini said...

படித்திருக்கேன். சில விடயங்கள் அகதி விண்ணப்பத்திற்காக சேர்க்கப் பட்டிருக்கலாம். போததற்கு அவரின் தனிப்பட்ட செயற்பாடுகள் மறைக்கப் பட்டிருக்கலாம். அவரின் குழந்தைகள் பற்றி அவருக்கு என்ன அக்கறை இருந்தது? எப்படி குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார்? கடும் பயிற்சி பெற்றவர் வன்புணர்வின் பின் விபரிப்பது நம்ப முடியவில்லை. சுத்தமாக சுய நலத்துடன் நடந்து இருக்கின்றார். எப்படி போராளி(தலையங்கம்)யானார்?

சிம்பாவேயில் மூன்றில் ஒரு பெண் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றார்கள்.