Saturday, September 19, 2009

(காகித) அரண் - சினிமா விமர்சனம்.

டி.வி.யை ஆன் செய்தபோது வந்தது நியூஸ். இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவவில்லை. ஊடகங்கள் இதை பெரிதுபடுத்த வேண்டாம் என்று ராணுவ தளபதி தீபக் கபூர் சொன்ன ப்ளாஷ் நியூஸ். காலையில் செய்தித்தாளில் படித்த நியூஸ் ஞாபகம் வந்தது. 13 ஆயிரம் அடி உயரத்திலிருந்த இந்திய ராணுவ விமான தளத்தில் ஆயுதங்களுடன் போய் இறங்கியது என்ற நியூஸ் பத்திரிக்கையின் 7வது பக்கத்தில் வந்திருந்தது. சீனாவும் இந்தியாவும் நண்பர்கள் என்று வேறு எஸ்.எம்.கிருஷ்ணா ஸர்டிபிகேட் கொடுத்திருந்தார். சரி பார்க்கலாம் எத்தனை நாளைக்கு கண்ணாமூச்சி என்றுவிட்டு சேனலை மாற்றினேன்.

ஒரு படம் ஆரம்பித்துக்கொண்டிருந்தது ‘இனமான” டி.வி.யில். பெயர் அரண். பாதுகாப்புச் சுவர் என்கிற அர்த்தத்தில். தேசபக்தி இசை டைட்டிலிலேயே ஆரம்பித்தது. சரிதான் ரொம்ப தேசபக்தி என்று நெஞ்சை நக்குவார்களே என்று சேனலைத் திருப்புமுன் கதை ஆரம்பித்துவிட்டது. சரி கொஞ்சம் பார்ப்போமே என்று பார்த்தால்..

எடுத்தவுடன் கதை ஆப்கானிஸ்தான் காபூலுக்குத் தாவுகிறது. அங்கே நம் இந்திப்பட வில்லன் ஒருவன் பாகிஸ்தான் தீவிரவாதி. அவன் ஆப்கானிஸ்தானில் தலீபன்களால் கைது செய்யப்பட்டு கொல்லப்பட இருக்கும் தீவிரவாதிகளை விலைக்கு வாங்கி கூலிக்கொலையாளிகளாக காஷ்மீருக்கு கடத்தி வருகிறான். ஆயுதப் பயிற்சி கொடுக்கிறான். காஷ்மீரில் மசூதிகளுக்குள் ஆயுதங்களை ஒளித்து வைத்துக்கொண்டு சின்ன சின்ன குழந்தைகள் போகும் பஸ்களில் சரியாகக் குண்டு வைக்கிறான். இப்படி இஸ்லாமியத் தீவிரவாதிகள் காஷ்மீர் மக்களையும் கொடுமைப்படுத்த, இவர்கள் அக்கிரமத்தை தடுத்துக் கேட்கவேண்டாமா ?

அவர் தான் ஜீவா. கதாநாயகன். அவர் ஒரு ராணுவ கமாண்டோ. அவருடைய மேஜர் நம்ப மலையாள மோகன்லால்(இவருக்கு ஒரு சோக பேமிலி பிளாஷ்பேக்கும் உண்டு – பின்னே 21/2 மணி நேரம் எப்படி ஓட்டுறதாம்). அவர்களுடைய குழுவின் வேலை காஷ்மீரில் இயங்கும் தீவிரவாத குழுக்களைக் கண்டறிந்து அதிரடி ஆப்பரேஷன் செய்து ஒழித்துக்கட்டுவது தான் வேலை. ரொம்பக் கஷ்டமான வேலை தான். கதை ஒன்றும் குளுகுளுவென்றில்லையே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. ஹீரோவுக்கு கல்யாணம் பொள்ளாச்சியில். கோபிகாவைக் கண்டு, காப்பாற்றி (ரௌடிகளிடமிருந்து), டாவடித்து பின் கல்யாணமும் கட்டிக்கொண்டு மூன்று நாட்கள் தேனிலவு நாட்களை என்ஜாய் பண்ணிக்கொண்டிருக்கும் போது ராணுவத்திலிருந்து ‘அவசர’ அழைப்பு வர பறந்து வருகிறார் காஷ்மீருக்கு. கூடவே கஞ்சாக் கருப்பு காஷ்மீர் நாயர் ஹனீபா வைத்திருக்கும் டீகடைக்கு எடுபிடியாக வர, ரமேஷ்கண்ணா ‘ரகசியா’வின் பரம ரசிகராக மட்டும் வரும் ராணுவ வீரர் (காமெடி வேண்டாமா என்று நினைத்திருப்பார்கள் போல... மொத்த படமே முழுநீள நகைச்சுவைதான் போங்கள்). ரகசியாவின் நடன விருந்தும் ராணுவ வீரர்களுக்கு உண்டு. இந்த லட்சணத்தில் பிரகாஷ்ராஜ் வேறு ஒரு ராணுவ கமாண்டராக வந்து வீணடிக்கப்பட்டிருக்கிறார் (மோகன்லாலும் தான்).

இந்தப் படத்தை எப்படி அனுமதித்தார்கள் என்றே எனக்குப் புரியவில்லை. படம் முழுக்க இஸ்லாமியர்களுக்கு எதிராக இருக்கிறது. தலீபான்கள், காஷ்மீர் தீவிரவாதிகள் யார், அவர்களின் போராட்டம், வரலாறு என்ன என்கிற ஒரு சின்ன கேள்வி கூட எழுப்பாமல், தீவிரவாதி ஒரு முஸ்லீம் குடும்பத்தை சிறைப்பிடித்து சித்திரவதை செய்வதாகவும், அவர்களின் குடும்பத்துப் பெண்ணை கெடுப்பதாகவும் சித்தரிக்கும் குரூரம் செய்திருக்கிறார்கள்.

ஒரு இடத்தில் ஒரு தீவிரவாதிக் கூட்டத்தை வளைத்துப் பிடித்து எல்லோரையும் சுட்டுக் கொல்ல கடைசியில் அவர்களின் தலைவன் மெஷின் கன்னை எறிந்து விட்டு கூலாக ‘சரண்டர்’ ஆகிவிடுவான். அப்போது அவர்கள் சுடமாட்டார்களாம். அவன் தைரியமாகச் சொல்லுவான் ‘என்னை நீங்க ஜெயிலிலே அடைப்பீங்க. நாங்க சில மக்களைக் கடத்திட்டு, அவங்களைப் பணையமாக்கி பின்னர் நான் விடுதலையாகிடுவேன்’ என்கிறான். எவ்வளவு அப்பாவி காஷ்மீர் இன இளைஞர்களை ‘விசாரிக்க’ அழைத்துப் போய், வருஷக்கணக்கில் வைத்திருப்பதும், சுட்டுக் கொல்லப்பட்ட அவர்களின் உடல்களை சாலையோரத்தில் கொண்டுவந்து போட்டுவிட்டு, கூடவே இரண்டு ரைபிள்களையும் போட்டுவிட்டு ‘தீவிரவாதிகளைப்’ பிடித்ததாக போஸ் கொடுக்கும் இந்திய ராணுவம் பற்றி நமக்கு இவர்கள் படம் எடுப்பதில்லை. ஒரு ராணுவ வீரன் காயம் பட்ட தீவிரவாதியைச் சரியாகச் சுட்டுக் கொல்லவில்லை என்று மோகன்லால் அவனை மிரட்டி உருட்டி தேசபக்தியூட்டி(?) அவன் படபடவென காயம் பட்டுக் கிடப்பவனை சுட்டுக் கொல்கிறான். காயம் பட்டுக்கிடப்பது எதிரியென்றாலும் அவனைக் காப்பாற்றுவது தான் ராணுவ ஒழுங்கு என்கிற சின்ன மனிதாபிமானம் கூட இல்லை.

இத்துடன் படம் முழுக்க ‘இந்தியன்’, ‘இந்தியன்’ என்று மந்திரித்துக் கொண்டே இருக்கிறார்கள். அபத்தத்தின் உச்சகட்டமாக, கடைசியில் வழக்கம் போல் ஹீரோ நாட்டுக்காக உயிரையே கொடுக்க, செத்துப்போன தீவிரவாதிகளின் உடல்களின் மேல் ஏறி மிதித்தபடி அந்தத் துன்பப்பட்ட காஷ்மீரித் தாய் ‘ஏண்டா இங்க வந்து எங்க சுதந்திரத்தை கொல்றீங்க..உங்க நாட்டுக்கே திரும்பிப் போங்கடா.. இந்தியாவில் இஸ்லாமியர் நமக்கு இடமில்லைன்னு சொன்னீங்களேடா.. உண்மைதாண்டா.. ஏன்னா நாங்கல்லாம் இந்தியங்க..’ என்கிற பொருள்பட டயலாக் பேசி ‘இந்திய’ தேசியம் என்னும் பாசிசத்தின் கொள்கைபரப்புச் செயலாளராகி படத்தை முடித்துவைக்கிறார். படம் முழுக்க மலையாள முகங்கள். சம்பந்தமில்லாமல் எம்.கே.நாராயணன், மேனன், நம்பியார் என்று ஈழப் பிரச்சனையில் ‘தேசிய இறையாண்மை’ பேசிய முகங்கள் ஞாபகம் வருகின்றன.

இந்த மாதிரி ஒரு டப்பா படத்துக்கு விமரசனம் எழுத விருப்பமில்லை தான். ஆனால் இந்தக் கலாச்சாரப் புலிகளின் போக்கை யாராவது மக்களுக்கு காட்ட வேண்டும் இல்லையா? அரசுகள் கற்பிக்கும் தேசியம், அவை காட்டும் நாட்டுப்பற்று எல்லாம் போலியானது என்பது சாதாரண மக்களுக்குப் புரிவது இருக்கட்டும். ராணுவம் என்பது ஒரு அடக்குமுறைக் கருவி; அதன் நோக்கம் அரசுகளைக் காக்க அன்றி, மக்களைக் காக்க அல்ல. ஆனால் மக்களைக் காக்கத் தான் அது இருக்கிறது என்று நம்பவைக்கப்படுவதன் மூலமே அதன் அசுர வளர்ச்சியும், அதற்குத் தீனியும், செய்யும் செலவுகளும் ஞாயப்படுத்தப்படுகின்றன. ஐயா, குறைந்தபட்சம் யாராவது இந்த இந்திய தேசிய ராணுவப் புடுங்கிகளின் வண்டவாளங்களை வெளிப்படுத்த படம் எடுங்களேன்.

1 comment:

  1. அம்பேதன் (தமிழில் இது சரியா தெரியவில்லை)

    இப்படியெல்லாம் வெட்டவெளிச்சமாக விமர்சனம் வைக்கலாமா? தேசத்துரோகக் கும்பலில் சேர்த்துவிடப் போகிறார்கள். மிகத் தெளிவோடு இருக்கிறீர்கள். இப்படிச் சிலராவது இருப்பது மகிழ்ச்சி தருகிறது. மிகப் பொய்யான ஒரு உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பொய்யை மெய்யாக்கி அழகாக விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

    "அரசுகள் கற்பிக்கும் தேசியம், அவை காட்டும் நாட்டுப்பற்று எல்லாம் போலியானது என்பது சாதாரண மக்களுக்குப் புரிவது இருக்கட்டும். ராணுவம் என்பது ஒரு அடக்குமுறைக் கருவி; அதன் நோக்கம் அரசுகளைக் காக்க அன்றி, மக்களைக் காக்க அல்ல. "

    என்ற வரிகள் மிகப் பிடித்திருந்தன. 'அரண்'படத்தில் 'அல்லாவே எங்களின் தாய்தேசம்'என்றொரு பாடல் மாணிக்கவிநாயகம் அவர்களின் குரலில் வரும். கேட்டுப் பாருங்கள். அந்தப் பாட்டு ஈழப்பிரச்சனையை நினைவுறுத்தும். பா.விஜய் அவ்வப்போது சில நல்ல பாடல்களும் எழுதுகிறார். அதில் ஒரு பொருட்பிழை இருக்கிறதாம். 'ரோஜாக்கள் எம் பெண்கள் பார்த்து அழத்தானா?'என்றொரு வரி இடம்பெற்றிருக்கிறது. அங்குள்ள பெண்கள் கூந்தலில் பூச்சூடுவதுண்டா என்று யாரோ கேட்டிருந்தார்கள்.

    ReplyDelete

Please don't write junk comments.. bad words..hate msgs..marketing messages. thank you.