Thursday, August 6, 2009

உத்தபுரம் – தடைச் சுவற்றில் ஒரு சிறிய காற்று இடைவெளி

மீள் பதிப்பு : 28 அக்டோபர் 2009.
5 ஆகஸ்ட் 2009.
உத்தபுரத்தில் 1989 ல் மேல் சாதியினரான பிள்ளைமார்கள், தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் பகுதிக்கு வரக்கூடாது, தங்கள் கோயிலில் வழிபாடு செய்யக்கூடாது என 600 மீட்டர் நீளச் சுவரை ஊரின் குறுக்கே கட்டியிருந்தனர். தீண்டாமையின் கோரப்பிடியில் அடிக்கடித் தாக்கப்பட்ட தலித்களிடம் ஒரு மிரட்டல் ஒப்பந்தம் செய்து இதுபோன்ற ஒரு சுவரை ஊரின் குறுக்கே கட்டியிருந்தனர் ஆதிக்க சாதியினர். தனி பள்ளிக்கூடம், தனி பாதை, எல்லாம் தனி. தலித் மக்கள் பிள்ளைமாரிடமிருந்து தள்ளி நிற்க, விலகி வாழ கற்றுக்கொண்டிருந்தனர். அரசு இயந்திரமும் இதற்கு வழி செய்வது போல தனிப் பள்ளிக் கூடம், தனி டீக்கடை என்று ‘எல்லாம் நல்லாத் தான் போய்கிட்டிருந்தது..’ 18 வருஷங்களாக, சி.பி.எம்காரர்கள் 2008 ல் தீண்டாமை பற்றி சர்வே எடுக்கும்வரை. அப்புறம் பிடித்தது தலித்துகளுக்குச் சனி. சி.பி.எம் இதை ஊடகங்களில் கொண்டு வர முயற்சித்தபோது ஊடகவியலாளர்கள் போட்டோ ஆதாரம் கேட்டுள்ளனர். சுவரை இவர்கள் போட்டோ எடுத்து வெளியிட பெரிய சலனம் ஏதுமில்லை. பின்னர் வட இந்தியப் பத்திரிக்கைகளும் இதை எழுத, சுவரில் மின்சாரம் பாய்ச்சி வைத்திருப்பதாக எழுந்த தகவலால் விஷயம் சூடானது.

இச்சுவற்றைப் பற்றி கண்டு வெளிப்படுத்தியது சி.பி.எம் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவு. ஆனால் மாநில அரசோ, தலித் தலைவர்களோ இதுபற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆதிக்க சாதிக்காரர்கள் அவர்களின் சொந்த இடத்தில் கட்டிக்கொண்ட சுவர் அது. தீண்டாமைச் சுவரல்ல என்று அரசு விளக்கம் வேறு கொடுத்தது. கலைஞரைச் சந்தித்துவிட்டு நேரே உத்தபுரம் போன புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உத்தபுரத்து மக்களிடம் பிள்ளைமார் சார்பில் தன்னை சந்தித்துப் பேசி கிருஷ்ணசாமி சொன்ன தீர்வை ஏற்றுக் கொண்டதாகவும் அதை நிறைவேற்றும் வரை பொறுத்திருங்கள் எனவும் வேண்டிக்கொண்டார். இதற்கிடையில் பிரகாஷ் காரத்தை அழைத்து வந்து அவர் முன்னிலையில் சுவரை இடித்து தேசிய அளவில் இப்பிரச்சனையை கவன ஈர்ப்பு செய்ய சி.பி.எம்மின் குழு முடிவு செய்தது. சி.பி.எம் மின் பங்கு இப்போராட்டத்தில் முக்கியமானது. தேசிய அளவில் இது கவன ஈர்ப்புப் பெற ஆரம்பித்ததை உணர்ந்த தமிழக முதல்வர் கலைஞர் 600 மீ சுவற்றில் 150 மீட்டர் நீளச் சுவர்ப் பகுதியை காவல்துறையினர் கொண்டு இடித்துவிட்டார்.

சுவர் சிறிது இடிந்தது. தீண்டாமைப் பிரச்சனை வெளிச்சமானது.

அதைத் தொடர்ந்து பிள்ளைமார்களும், தலித்துகளும் மோதிக்கொண்டனர். பிள்ளைமார்களுக்கு பக்கத்து கிராமங்களிலிருந்தும் தேவர் போன்ற ‘சம’ சாதியினரின் ஆதரவு கிடைத்தது. கூடவே காவல் துறையின் அதிகாரம் பிள்ளைமார்களின் பக்கம். (காவல் நிலையம் இருப்பதே பிள்ளைமார்கள் பகுதியில்தான்; இடத்தில்தான்.). பிரச்சனையை பெரிதுபடுத்த விரும்பிய பிள்ளைமார்களும் அவர்களுக்குத் துணைநின்ற சுத்துப்பட்டு முக்குலத்தோரும் வியூகங்கள் வகுத்தனர். முதலில் சற்றுத் தள்ளியிருந்த கிராமத்திலிருந்த முத்துராமலிங்கத்தேவர் சிலை மீது முக்குலத்தோர் ஆட்களே செருப்பு மாலை போட்டு விட்டு தலித்துகள் மீது பழிபோட முயல (அந்த ஊரில் இருந்ததே ஒரே ஒரு தலித் தான்) அங்கிருந்த எஸ்.பி அன்பு சமயோசிதமாக மோப்பநாய் கொண்டு மாலை போட்டவனை பிடித்துவிடுவேன் என்று மிரட்ட, அவர்களே தங்கள் ஆட்களைப் பிடித்து பஞ்சாயத்தில் அபராதம் கட்டவைத்து, சிலையை கழுவிவிட்டுவிட்டார்கள்.

பின்னர் ஒரு நாள் புதிய தமிழகம் கிருஷ்ணசாமியின் மகள் திருமண போஸ்டர் பிரச்சனைக்குரிய உத்தபுரம் அம்மன் கோயில் சுவரில் ஒட்டப்பட்டிருந்தது. இந்தக் கோயில் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருந்தாலும் பிள்ளைமார்களால் உரிமை நிலைநாட்டப்பட்டு தலித்துகள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. தலித்துகள், தலித் குழந்தைகள் தவறி உள்ளே நுழைந்துவிடாமல் இருக்க கோயிலையொட்டி கோயில் மதிற்சுவர் போல் ஒரு சுவர் கட்டப்பட்டிருந்தது. இச்சுவர் தலித் பகுதியிலிருந்து தலித்துகள் கோயிலுக்குள் வருவதை தடுத்தது. கோயில் கும்பாபிஷேகம் நடக்கவிருந்த சமயத்தில் இந்தச் சுவற்றின் மீது வெள்ளையடிக்கப் பட, இதைத் தொடர்ந்து தலித்துகள் கோயிலினுள் புகுந்துவிடுவார்களோ என பிள்ளைமார்கள் பயப்பட்டனர். இருபக்கமும் கற்கள் பறந்தன.

இதை தினமலர் போன்ற பத்திரிக்கைகள் ஆதிதிராவிடர்கள் பிள்ளைமார்கள் தெருவை நோக்கி பெட்ரோல் குண்டு எறிந்தார்கள் அதனால் சண்டை மூண்டது என திரித்து எழுதின. ஆனால் தலித்துகள் கம்யூனிஸ்ட்டுகளின் அறிவுரையால் தற்காப்புக்கு ஆயுதங்களை வாங்காமல் தவிர்த்திருந்தனர். தலித் ஆண்கள் பலரின் மீதும் வழக்குகள் போடப்பட்டு போலீசால் ‘தேடப்பட’ தலித் ஆண்கள் மொத்தமும் தலைமறைவாயினர். ஆனால் காவல் துறையால் எந்த குண்டுகளோ, ஆயுதங்களோ உத்தபுர தலித்துகளிடமிருந்து கைப்பற்ற இயலவில்லை. காவல் துறையின் வழக்கம் எந்த இடத்தில் போராட்டம் தீவிரமடையுமோ, அவ்விடத்தில் தலித்துகளை ‘போட்டுப் பார்ப்பது’ என்பது. அப்படி உத்தபுரம் தலித்துகளை போட்டுப் பார்க்க காவல் துறை ரகசியமாய் முடிவுசெய்துகொண்டது. இதற்கிடையில் தலித் பெண்மணி ஒருவர் இறந்துவிட ஊரில் ஆண்கள் எல்லோரும் தலைமறைவாய் இருந்ததால் பெண்கள் மட்டுமே சேர்ந்து இறந்தவரை அடக்கம் செய்திருக்கிறார்கள்.

அக்டோபர் 2ம் தேதி மீண்டும் கலவரம் வெடித்து, இம்முறை காவல் துறையினர் தலித்துகளின் குடியிருப்புகளுள் நுழைந்து வீடுகளில் இருந்த பெண்களையும், குழந்தைகளையும் வயதானவர்களையும் கண்மூடித்தனமாகத் தாக்கினர். அவர்கள் வீடுகளிலிருந்த கொஞ்ச நஞ்ச பொருட்களையும் நொறுக்கினர்.

சி.பி.எம் மற்றும் மார்க்ஸ் மற்றும் பெரியார் திராவிடர் கழகம் போன்றோர் இதற்காகப் போராடினர். கிருஷ்ணசாமி மற்றும் திருமாவளவன் போன்றோர் ஆர்வமாக வந்து சேர்ந்து போராடவில்லை. இவர்களுக்கு சேர்ந்து போராட அழைப்பு விடுத்ததாக சி.பி.எம் தரப்பு சொல்கிறார்கள். திருமாவளவன் போராட்டத்தை ஆதரித்து அறிக்கை வெளியிட்டதோடு மட்டும் நிறுத்திக் கொண்டார் (ஏன் சார்?). சி.பி.எம் போன்ற கட்சிகளுடன் சாதிக் கட்சிகள் இணைந்து போராடுவதில் உள்ள சிக்கல்களைக் களைந்து ஒரு பொதுவான புரிதல்களுக்குள் வரவேண்டும். சி.பி.எம்மோ நாங்கள் கூப்பிட்டும் அவர்கள் வரத் தயங்குகிறார்கள் என்கின்றனர்.

கிருஷ்ணசாமியோ பிள்ளைமார்கள் வம்பு தும்புக்குப் போகாதவர்கள் என்கிற ரீதியில் ஸர்டிபிகேட் கொடுத்தார். பின்னர் பக்கத்து கிராமம் ஒன்றில் அவர் காரசாரமாகப் பேசிச் செல்ல அவரின் கார் தாக்கப்பட்டது. சில நாட்கள் கழித்து கிருஷ்ணசாமி தாக்கப்பட்டதைக் கண்டித்து எழுமலை கிராமத்தில் அமைதியான முறையில் சாலைமறியல் செய்த தலித் மக்களின் மீது ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தி துப்பாக்கிச் சூடு நடத்தி சுரேஷ் என்கிற 25 வயது தலித் இளைஞரை சுட்டுக் கொன்றார். இதற்கு தனியாக அரசு திருப்பதி கமிஷன் நியமித்தது. அந்தக் கமிஷனின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 3 மாதங்களாகியும் அரசு அதை இன்னும் வெளியிடவில்லை. கிருஷ்ணசாமி இறந்த சுரேஷின் குடும்பத்தினருக்கு 1 லட்சம் நிவாரணம் வழங்கினார். ஆனால் வேறு எந்தக் கட்சியுடனும் சேர்ந்து இது பற்றி இனிமேல் பேசக்கூடாது என்று சுரேஷின் குடும்பத்தினர் வாயை அடைத்ததாக சி.பி.எம் தரப்பில் கூறப்படுகிறது.

அ.மார்கஸ் போன்றோர் அடங்கிய உண்மை அறியும் குழு உத்தபுரத்தில் நிலவிவரும் தீண்டாமையின் ரத்தக் கீறலை உறுதி செய்தது. உண்மைப் பிரச்சனையான தீண்டாமைப் பிரச்சனையின் மீது இன்னும் ஒரு விவாதமோ, கேஸோ நடக்கவில்லை. ஊரில் இருந்த ஒரு ஆதிக்கசாதியினன் கூட வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைதாகவில்லை.

இந்நிலையில், சி.பி.எம் சார்பாக, காவல்துறையினரின் அத்துமீறல் தாக்குதல்களுக்கு எதிராக உயர்நீதிமன்ற கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கில் இடைக்கால தீர்ப்பாக காவல் துறையின் தாக்குதலில் காயம் அடைந்த தலித்துகளுக்கு மருத்துவ இழப்பீட்டுத் தொகையாக 15 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளது. வழக்கானது திசை திரும்பி பிள்ளைமார்கள் X தலித்துகள் என்பது போய், காவல்துறை X தலித்துகள் என நிறுத்தப்பட்டிருக்கிறது. இவ் வழக்கின் இறுதியில் காவல்துறை மேல் ஏதாவது எச்சரிக்கைகள் விடப்படலாம். காக்கிச் சட்டைகள் சில சஸ்பெண்ட் பண்ண்ப்படலாம். இதைத் தவிர பெரிதாக எதுவும் செய்ய வாய்ப்பில்லை. பிள்ளைமார்களும், கோயிலும், தலித்துகளுக்காக திறக்க வழியில்லை. தலித்துகளைத் தாக்கியவர்கள் மீது சட்டங்கள் இதுவரை பாயவில்லை.

ஆனாலும் காற்றுப் புகாத கான்கிரீட் சுவற்றில் இந்தத் தீர்ப்பு ஒரு சின்ன ஓட்டை என்று நினைத்து ஆறுதலடையலாம். இந்தச் சின்ன வெற்றிக்குப் பெருங்காரணம் சி.பி.எம் தான். இந்த ஓட்டை விரிந்து என்று சுவர் முழுதும் இடியும் ?

கண்ணுக்கெட்டிய தூரம் வரை காட்சி எதுவும் தெரியவில்லை.

பின்குறிப்பு:
சி.பி.எம்மின் தீண்டாமை ஒழிப்பு ஆர்வங்களின் காரணங்கள் என்ன என்று ஆராய்ச்சியை நாம் பிறகு தனியே செய்து கொள்ளலாம். தீண்டாமை ஒழிப்புப் பிரச்சனையை முப்பது வருடங்களுக்கு முன் கேலி செய்து அசட்டை செய்த சி.பி.எம் இன்று காலங்கடந்து அப்பிரச்சனையைக் கையிலெடுத்துள்ளது. இதனால் முப்பது வருடங்கள் அதன் வளர்ச்சி தேங்கி நின்றது.

தீண்டாமைக்காக இவ்வளவு ஆழமாக இறங்கிப் போராடிய சி.பி.எம் இந்த நூற்றாண்டில் கண்முன்னே நடந்த கொடூரமான இலங்கை இனப் படுகொலைக்கு ஏன் எச்சில் கையால் காக்கை கூட விரட்டவில்லை ? முத்துக்குமாரின் மகத்தான தியாகத்தை மறுதலித்ததன் மூலம் சி.பி.எம் ஆளும் வர்க்கத்திற்குத் துணையாய்ப் போயிற்றே என்பது எங்கள் வேதனை. அதே போல் இலங்கைப் பிரச்சனையிலும் இன்று சி.பி.எம் தேசிய இனங்களின் போராட்டத்திற்கு எதிரான நிலை எடுக்கிறது. அதை இப்போதாவது உணருமா ?
- அம்பேதன்

No comments: